இரத்தின புகழேந்தி நூல்கள்

இரத்தின புகழேந்தி நூல்கள்
RATHINA PUGAZHENDI BOOKS

10 ஜனவரி, 2009

நூறு வயது ஓலைச்சுவடி

இந்த நூற்றாண்டிலும் பேருந்து செல்லாத ஒரு சிற்றூர் கடலூர் மாவட்டத்தில் உள்ளது.விருத்தாசலம் வட்டத்திலுள்ள கொடுமனூர்தான் அது. அந்த ஊரில்தான் நூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட ஓலைச்சுவடியைப் பாதுகாத்து வைத்துள்ளனர். மன்மதன் கதைப்பாடல் அடங்கிய அச்சுவடி ஐம்பத்து மூன்று ஓலைகளில் இருபுறமும் எழுதப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளது. காமன் புஷ்தகம் என்று குறிப்பிடப்பட்டுள்ள அச்சுவடியை செம்புலிங்கபூசி என்பவர் எழுதியுள்ளார். அவரின் வழித்தோன்றலான செயராமன் அதை இன்றுவரைப் பாதுகாத்து வருகிறார். ஆண்டுதோறும் மாசி மாதம் நடைபெறும் மன்மதன் கோயில் திருவிழாவில் இச்சுவடியிலுள்ள பாடல்கள் பாடப்படுகின்றன. "மாசி பிறை கண்டு மன்மதர்க்கு காப்பு கட்டு" என்ற சொல்லடை இம்மக்களிடம் இன்றும் புழக்கத்திலுள்ளது. பத்துநாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் மன்மதன் கதைப்பாடல் பாடப்பட்டிருக்கிறது என்பதை சுவடியிலுள்ள குறிப்புகள் மூலம் அறிய முடிகிறது. முதல் நாள் கதை, இரண்டாம் நாள் கதை என ஒவ்வொரு நாளும் பாடவேண்டிய பகுதிகள் அதில் பிரித்து எழுதப்பட்டுள்ளன.காப்புகட்டுதல் என்பது முதல் நாள் திருவிழாவாகும். மன்மதன் கோயில் காமட்டி கோயில் என்று சிற்றூர் மக்களால் குறிப்பிடப்படுகிறது. காமன் என்பது மன்மதனின் மற்றொரு பெயராகும்.
மன்மதனுக்குக் கோயில்கட்டி விழா எடுக்கும் வழக்கம் தமிழர்களிடையே தொன்றுதொட்டு இருந்து வருகிறது என்பதற்கான சான்றுகள் தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன. மன்மதன் கோயிலைக் காமவேள் கோட்டம் என்று சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.கனாத்திறம் உறைத்த காதையில் தேவந்தி கண்ணகியை நோக்கிக் கூறும்போது சோமகுண்டம்,சூரிய குண்டம் என்னும் புண்ணிய தீர்த்தங்களின் துறைகளிலே மூழ்கி,காமவேள் கோட்டம் சென்று காமதேவனைத் தொழும்மகளிர் தம் கணவருடன் கூடிப் பிரியா வாழ்வு வாழ்ந்து இன்புறுவர் என்று கூறுவாள். இப்பகுதி சோமகுண்டம் சூரிய குண்டம் துறை மூழ்கிக்காமவேள் கோட்டம் தொழுதார் கணவரொடுதாமின் புறுவர் உலகத்துத் தையலர் (சிலம்பு: 9;59-60)
என்று இளங்கோவடிகளால் எழுதப்பட்டுள்ளது. இளவேனிற்காலம் மன்மதனுக்கு உரிய காலமாகும்;இக்காலத்தே மன்மதனுக்கு விழா எடுக்கும் பழக்கம் பழங்காலத்திலிருந்திருக்கிறது,இது காமன்விழா, காமன் பண்டிகை என்றெல்லாம் குறிப்பிடப்பட்டிருக்கிறது.கலித்தொகையில் அத்தகைய பாடல்கள் காணக்கிடைக்கின்றன.
காமவேள் விழாவாயின்,கலங்குவள் பெரிது என (கலி:27;24) உறல் யாம் ஒளிவாட,உயர்ந்தவன் விழவினுள்.... (கலி: 30:10)வில்லவன் விழவினுள் விளையாடும்பொழுதன்றோ (கலி: 35;14)
மேற்கண்ட கலித்தொகைப்பாடல்களில் காமவேள்,உயர்ந்தவன்,வில்லவன் என்பனவெல்லாம் மன்மதனைக்குறிக்கும் சொற்களாகும்.இளவேனில் காலமான சித்திரை, வைகாசி மாதங்களில் கொண்டாடப்பட்ட இவ்விழா இன்று பின்பனிக்காலமான மாசி மாதத்தில் கொண்டாடப்படுகிறது.பெரும்பாலும் வடமாவட்டங்களில் வன்னியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இவ்விழா மிகுதியாகக் கொண்டாடப்படுகிறது.
காப்பு கட்டிய முதல் நாளில் மன்மதனின் பிறப்பு கதைப்பாடலாகப் பாடப்படுகிறது.இது ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமாகப் பாடப்படுகிறது. கொடுமனூரில் கிடைத்த ஓலைச்சுவடியில் கீழ்க்கண்டவாறு பாடல் அமைந்துள்ளது. மனதில் நினைத்த உடன் மன்மதன் வந்தானேசிந்தைதனில் நினைக்க சிற்றரசன் பேச்சுமாசி பிறைதனில் மாறன் பிறந்தானேமாயனைப் போலே வந்து முன்னின்றானே (சுவடி:19;16-19)
என்று நீள்கிறது அப்பாடல்.
மன்மதன் பிறப்பைப் பாடுவதற்கு முன் வழக்கமாக ஓலைச்சுவடிகளில் உள்ளதைப் போன்று கடவுள் வாழ்த்துப் பாடல் இச்சுவடியிலும் இடம்பெற்றுள்ளது.கதைப்பாடல்களுக்கு உரிய இலக்கணங்களுடன் இச்சுவடி அமைந்துள்ளது. இரண்டாம் நாள் கதையில் ரதியின் பிறப்பும், மூன்றாம் நாள் கதையில் ரதி மன்மதன் திருமணமும் பாடப்பட்டுள்ளது. திருமணக்காட்சி கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்படுகிறது.
அக்கினிதான் வளர்த்து அழகான மாங்கல்யத்தைமன்மதன் கையில் வாழ்த்தியேதான் கொடுக்கஇரதி கழுத்திலேயணிந்து நல்ல மலர்மாலைஇருவரும் பூண்டு இருந்தார்களப்போது....
என்ற பாடலைத் தொடர்ந்து தக்கன் தவம் செய்வது அதனைக் கலைக்க பார்வதியை அனுப்புவது, அதிலும் இயலாமல் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு அம்முயற்சிகளும் தோல்வியில் முடியவே இறுதியாக மன்மதனை அனுப்புவது என்ற முடிவுக்கு வருகின்றனர். மன்மதன் சென்றால் அவனைத் தக்கன் அழித்து விடுவான் என்பதை ரதி கனவில் கண்ட காட்சிகளின் மூலம் உணர்ந்து மன்மதனைத் தடுக்கிறாள். மன்மதன் ரதிக்கு தேறுதல் கூறியும் பலன் இல்லை இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றுகிறது இறுதியில் மன்மதன் ரதியின் சொல்லைக்கேளாமல் சென்று தக்கனின் தவத்தைக் கலைக்க சிவன் நெற்றிக்கண்ணைத் திறந்து மன்மதனைச் சாம்பலாக்கி விட ரதி அழுது புலம்புவதாகக் கதைப்பாடல் முடிகிறது.
முன்பு கதைப்பாடல் முழுமையாகப் பாடப்பட்டது. இப்போது ஓலைச்சுவடியை முழுமையாகப் படிக்க யாரும் முன்வராமையால் முதல் நாளும் இறுதி நாளும் மட்டும் பாடப்படுகிறது.
ஒரு சில சிற்றூர்களில் சிறுவர்களுக்கு ரதி மன்மதன் வேடமிட்டு நிகழ்த்து கலையாக நிகழ்த்துகின்றனர். ரதி மன்மதன் திருமணக்காட்சி உண்மையான திருமணம் போன்றே நிகழ்த்தப் படுகிறது.
இறுதி நாள் விழாவில் மன்மதன் எரிந்து சாம்பலாவதையும் நிகழ்த்திக்காட்டுகின்றனர். காப்பு கட்டும்போது கோயிலின் முன் புறம் துவரை மிளாறுகளைக்கொண்டு ஒரு கூண்டு அமைப்பது வழக்கம் அக்கூண்டை மன்மதனாகக்கருதி அதனைக் கொளுத்திச் சாம்பலாக்குவர். இந்நிகழ்வைக் காமட்டி கொளுத்துதல் என்று குறிப்பிடுவர்.
இவ்வாறு இன்றும் சிற்றூர் மக்களால் காமன் பண்டிகைக் கொண்டாடப்படுகிறது.
நன்றி;தமிழ் ஓசை களஞ்சியம்.

3 கருத்துகள்: